Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 3

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 3

சென்ற கட்டுரையில் விமானங்களைப் பற்றிய புராண விளக்கங்களைப் பார்த்தோம். இப்போது, ஓரிரு கேள்விகளைப் பார்த்துவிட்டு மேலே செல்லலாம்.

முதலில், புராணம் என்ற கற்பனைக்கதையை நாம் ஏன் மதிக்கவேண்டும்? தற்காலத்தில் நாம் எழுதுவதே வருங்காலத்தில் புராணங்கள் ஆகின்றன அல்லவா? அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு ஏன் மதிப்பைக் கொடுத்து ஆராய வேண்டும்?

இந்தியப் புராணங்களில் மட்டும் இந்த பறக்கும் தட்டுகள் கொடுக்கப்படவில்லை; மாறாக உலகின் வேறு பல புராணங்களிலும் அவைகளைப்பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன என்று ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவருகின்றனர். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்க ஆரம்பிக்கலாம்.

இந்த இடத்தில், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பண்டையகால கிரேக்கப் பழமொழியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது ஒரு சிறிய கற்பனை. இது, எரிக் வான் டேனிக்கென் சொன்னது.

தற்காலத்தில், அண்டவெளியின் எந்த மூலைக்கும் சென்றுவரக்கூடிய அதிவேக ராக்கெட் ஒன்றைக் கண்டுபிடிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமது முதல் நோக்கம் என்னவாக இருக்கும்? நமது பால்வீதிக்கு மிகப் பக்கலில் இருக்கும் ஏதாவது ஒரு பால்வீதிக்குச் சென்று ஆராய வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு பால்வீதிக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தையோ அல்லது கிரகத்தையோ குறி வைத்து அந்த ராக்கெட்டில் நாம் பயணிக்கிறோம். ராக்கெட் அதிவேகத்தில் செல்வதால், சில வருடங்களில் அந்த கிரகத்தை அடைகிறோம்.அங்கே தரையிறங்கும்போது, அந்த கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிர்கள் – நமது நாகரிகத்தை விடப் பன்மடங்கு பின்தங்கியிருக்கும் உயிர்கள் இவை – நமது ராக்கெட்டைப் பார்த்து மிரட்சியடைந்து ஓடி ஒளிகின்றன. நாம் அங்கே இறங்கி, நமது ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறோம். கொஞ்ச காலத்தில், மெதுவாக வெளியே வரும் அந்த கிரகத்தின் உயிர்களிடம் பேசும் முயற்சியை நாம் ஆரம்பிக்கிறோம். நம்மிடம் பேசுவதற்கே அவர்கள் வெகுவாக பயந்துகொள்கின்றனர். எப்படியோ நம்மிடம் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும் அவர்கள், நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கண்டு நடுங்குகின்றனர் (நெருப்பைக் கக்கும் கை இத்யாதி). மெதுவாகத் தங்களது இனப் பெண் உயிர்களை நமக்கு அனுப்பி, அவர்களைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்டுக்கொள்கின்றனர். இந்தப் பெண்களுடன் நாம் உறவு கொள்வதன் மூலமாக சில புதிய, அறிவில் சற்றே மேம்பட்ட உயிர்கள் தோன்றுகின்றன. நமது ஆராய்ச்சி முடிந்ததும் அங்கிருந்து நாம் கிளம்பி விடுகிறோம். அதன்பின் வழிவழியாக வரும் அந்த கிரகத்தின் மக்கள், நம்மைப்பற்றிப் புராணங்களையும் கதைகளையும் எழுதுகின்றனர். நம்மைப் பற்றிய கோயில்கள் கட்டப்படுகின்றன. தற்காலத்தில் அங்கு சென்று பார்த்தால், நாம் தான் கடவுளர்கள் என்று நம்பி நம்மை அவர்கள் வழிபட்டுக்கொண்டிருப்பதைக் காணலாம். இன்னொரு கும்பல்,நாம் ஏலியன்கள் தான் என்று நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருக்கும். ஆனால் – மைன்ட் யூ – அவர்களிடம், தற்போது (ஏலியன்களாகிய) நம்மிடம் இருப்பதைப்போல் அதிவேகமாக கிரகங்களுக்குச் செல்லும் ராக்கெட்கள் இல்லை. ஆகையால், அவர்களால் எதையும் நிரூபித்து அறிந்துகொள்ள இயலாது. அதற்கு அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அந்த இடைவெளியில் – அவர்கள் அறிவினால் முன்னேறும் அந்தக் காலகட்டத்தில் – நமது தொழில்நுட்பமும் எக்கச்சக்கமாக முன்னேறிவிடும். ஆகையால், எப்படியானாலும், நாம்தான் அவர்களைவிட மேம்பட்டவர்களாக இருப்போம். நாம் எப்போது நினைத்தாலும் அவர்களின் கிரகத்துக்கு விஸிட் அடிக்க முடியும். ஆனால், அவர்கள் என்னதான் முயன்றாலும், அடுத்த சில நூறு வருடங்கள் வரை அவர்களால் அவர்களது பால்வீதியையே முழுதாக சுற்ற முடியாத நிலை.

நினைத்துப் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா?

இதுதான் பூமியில் கடவுளர்கள் வந்த கதை. ஏன் இப்படி நடந்திருக்கக்கூடாது என்பது எரிக் வான் டானிக்கென் போன்ற நபர்கள் எடுத்துவைக்கும் வாதம். இது உண்மையாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா? அல்லது இதெல்லாம் டுபாக்கூரா என்பதை, கட்டுரைகளின் போக்கில் அலசலாம்.

அத்தியாயம் 2 : Claude Vorilhon (AKA Raël)

இந்த ஏலியன் தியரிகளை உலகெங்கும் பரப்பி வரும் ஒரு நபரைப் பற்றி இப்போது பார்க்கலாம். இவர் பெயர் Claude Vorilhon. நமது வசதிக்காக, இவரை க்ளாட் என்று அழைப்போம்.

இப்போது நான் சொல்லப்போகும் விஷயங்கள், எனது சொந்த சரக்கு அல்ல. இது க்ளாட் எழுதிய புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டது. ஒருவேளை இது எவரது நம்பிக்கையையாவது காயப்படுத்தினால், அதற்கு முழுப்பொறுப்பு வகிக்கக்கூடியவர் இந்த க்ளாட் மட்டுமே. நானல்ல. ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு நாவலுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இவரது புத்தகங்களில் உண்டு.

இந்தப் பீடிகையுடன், மேலே தொடருவோம்.

ஆண்டு 1973. தேதி – டிஸம்பர் 13. ஃப்ரான்ஸின் Clermont -Ferrand பகுதியில், ஒரு எரிமலை. பெயர், Puy -de -Lassolas. அதனுள் ஜாக்கிங் செய்துகொண்டிருக்கிறார் க்ளாட். அன்றைய நாள் வரை அவர் ஒரு ரேஸ் கார் டிரைவர். அவ்வப்போது அந்த எரிமலைக்கு அவரது குடும்பத்தோடு அவர் வருவதுண்டு.

வானமெங்கும் மெல்லிய பனிப்புகை படர்ந்திருக்கிறது. அங்கிருந்து அவர் கிளம்பும் நேரம். கடைசியாக ஒருமுறை, எரிமலையின் உச்சியைச் சுற்றிப் படர்ந்துள்ள பனியைப் பார்க்கிறார் க்ளாட்.

பனியின் மத்தியில் செந்நிற ஒளி. சிறிது நேரத்தில், ஒரு சிறிய ஹெலிகாப்டர் அவரைநோக்கி வருகிறது. பக்கத்தில் வந்ததும், அது ஒரு ஹெலிகாப்டர் அல்ல என்று தெரிகிறது. எங்கும் நிசப்தம். இவரைநோக்கி இறங்கி வரும் ‘அதிலிருந்து’ ஒரு சிறிய சத்தம் கூட வரவில்லை.

ஆம். அது ஒரு பறக்கும் தட்டு.

கூம்பு வடிவில் அமைந்திருக்கும் அந்தக் கலம், அடியில் மிகவும் தட்டையாக இருக்கிறது. அடிப்பாகத்திலிருந்துதான் அந்த செந்நிற ஒளி வந்துகொண்டிருக்கிறது. கூம்பின் உச்சியில் இருந்து கண்களைக்கூசவைக்கும் வெண்ணிற ஒளி. இவரது அருகில், தரையிலிருந்து இரண்டு மீட்டர்கள் அளவில், அந்தரத்தில் எந்தச் சத்தமும் இன்றி நிற்கிறது அந்தக் கலம். அதன் அடிப்பாகத்திலிருந்து ஒருவிதமான படி தரையை நோக்கி நீள்கிறது.

இதோ… யாரோ அதில் இருந்து இறங்கி வரப்போகிறார்கள். பயமும் எதிர்பார்ப்பும் அவரது இதயத்தைப் பிளக்கின்றன. கடைசியாக, இரண்டு பாதங்கள் அப்படிகளில் இறங்குகின்றன. பாதங்களைத் தொடர்ந்து, இரண்டு கால்கள். இப்போது, க்ளாட் சற்றே ஆசுவாசம் அடைகிறார். காரணம், ஒரு மனிதனைச் சந்திக்கப்போகிறோம் என்பதை, அக்கால்களைக் கண்டதிலிருந்து அவர் புரிந்துகொண்டதே. அதனைத் தொடர்ந்து, நான்கு அடியே உள்ள ஒரு குழந்தை – இல்லையில்லை – ஒரு மனிதன் – இவரை நோக்கி மெதுவாக நடந்துவருகிறான். கருப்பு வண்ண நீள்முடி, தாடி இவற்றோடு சேர்ந்து ஒருவிதமான பச்சை வண்ண நீளமான உடையும் அணிந்திருக்கிறான்.

க்ளாடை நோக்கி மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்க்கிறார் ‘அம்மனிதர்’. க்ளாடின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

அம்மனிதனிடம் ஃப்ரெஞ்ச்சில் பேசத் தலைப்படுகிறார் க்ளாட்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?”

அதிசயிக்கத்தக்கவிதமாக, ஃப்ரெஞ்ச்சிலேயே பதில் வருகிறது. “மிகத்தொலைவிலிருந்து வருகிறேன்”.

“உங்களுக்கு எப்படி ஃப்ரெஞ்ச் புரிகிறது?”

“எனக்கு உலகின் எல்லா மொழிகளும் தெரியும்”.

இதன்பின் க்ளாட் அந்த மனிதரிடம் பேசியதாக வெளியிட்டிருக்கும் தகவல்கள் நம்மை அதிரவைக்கக்கூடியவை (என்கிறார் க்ளாட்). படுபயங்கர விறுவிறுப்பான ஒரு படத்தை, இத்தகவல்களை வைத்து எடுக்க முடியும்.

அவை…….?

தொடரும்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top