சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்.
ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்களினால் பெரும் கனவளவு நிரப்பப் பட்ட பெரு வாயுக் கோளான வியாழன் ஜோவியான் அல்லது வெளிப்புறக் கிரகங்கள் நான்கிலும் மிகப் பெரியதும் அதிக ஈர்ப்புச் சக்தி உடையதுமான கோளாகும். நாம் இதுவரை பார்த்த மிகச் சிறிய கிரகங்கள் பாறை அல்லது தரையை உடைய றொக்கி பிளானெட்ஸ் ஆகும்.
ஆனால் ஏனைய கிரகங்கள் வாயு ஜாம்பவான்கள் அல்லது மேற்பரப்பில் அதிகளவு வாயுவும் உட்கருவில் சூடான பாறையும் திரவ உலோகம் ஆகியவற்றை உடைய போதும் விண்கலங்கள் இறங்கக் கூடிய தரை மேற்பரப்பை இவை கொண்டிருக்காத தன்மை உடையன. இதனால் இவை வெளிப் புறக் கிரகங்கள் அல்லது ஜோவியான் கிரகங்கள் என அழைக்கப் படுகின்றன.
சூரியனிடமிருந்து ஐந்தாவது இடத்தில் அமைந்துள்ள வியாழன் பூமியின் விட்டத்தை விட 11 மடங்கு அதிக விட்டத்தையும் பூமியின் நிறையைப் போல் 318 மடங்கு அதிக நிறையையும் புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு அதிக ஈர்ப்பு விசையையும் உடையது. வியாழன் கிரகத்திற்குள் 1321 பூமிகளை வைக்கக் கூடிய இடம் காணப்படுகின்றது.
சூரியனிடமிருந்து சராசரியாக 484 மில்லியன் மைல் தூரத்திலும் பூமியிலிருந்து 97 மில்லியன் மைல் தூரத்திலும் அமைந்துள்ள வியாழன் தன்னைத் தானே சுற்றி வரும் வேகம் மிக அதிகமாகும். இது தன்னைத்தானே ஒரு முறை சுற்ற (விநாடிக்கு 8 மைல் வேகத்தில்) 9 மணி 50 நிமிடங்களை எடுக்கின்றது. இது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 12 வருடங்களாகும். வானில் நிலா மற்றும் வெள்ளிக்கு அடுத்து வியாழனே மிகப் பிரகாசமாக சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கிரகமாகும். மேலும் சூரிய குடும்பத்தில் மிக அதிக பட்சமாக 64 துணைக் கோள்களை வியாழன் கொண்டுள்ளது. இவற்றில் கனீமிட் எனும் துணைக் கோள் புதன் கிரகத்தை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழனின் துணைக் கோள்களும் பூமியும் அதன் நிலவும்
வியாழனில் மிக அதிகளவில் வாயுக்களின் புயல் வீசி வருகின்றது. இதன் விளைவாகவே இங்கு மிகப் பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் (Great Red Spot) உருவாகியுள்ளது. பூமியை விட மிகப் பெரிய கனவளவுடைய இப்பிரதேசத்தில் 17ம் நூற்றாண்டில் தொடங்கிய மாபெரும் புயல் வீசி வருகின்றது.
மேலும் ஏனைய ஜோவியான் கிரகங்களைப் போலவே (சனி,யுரேனஸ்) வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதியும் வலிமையான காந்தப் புலமும் உள்ளது. வியாழனின் அதி கூடிய ஈர்ப்பு விசை காரணமாக விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் தூசுதுகள்கள், வால் வெள்ளிகள், மற்றும் விண் கற்கள் என்பன ஈர்க்கப்பட்டு அதன் துணைக் கோளாக மாறக் கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன. மேலும் புவிக்கருகில் வியாழன் இருப்பதால் பூமியைத் தாக்க வரும் விண் பொருட்களும் இக்கோளாள் ஈர்க்கப்பட்டு விடும் சந்தர்ப்பங்களும் பல நிகழ்ந்துள்ளன.
மிகச் சிறந்த வானியலாளரும் தொலைக்காட்டியைக் கண்டு பிடித்தவருமான கலிலியோ தனது தொலைக் காட்டியின் மூலம் 1610 ஆம் ஆண்டு வியாழனின் 4 பெரிய நிலவுகளைக் கன்டு பிடித்தார். அவை யுரோப்பா,கனிமீட்,லோ மற்றும் கல்லிஸ்டோ என்பவையாகும். வியாழன் மிகப் பெரிய கிரகமாகத் திகழ்வதால் அதற்கு ரோமானியர்கள் தமது கடவுள்களின் அரசனும் வானத்தின் தேவனுமான ஜுபிடர் எனும் பெயரைச் சூட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.
வானியல் அறிஞர் கலிலியோ
ரோமான் கடவுள்களின் அரசன் ஜுபிட்டர்
வியாழன் ரோபோட்டிக் விண்கலத்தாலும் நாசாவின் பயனீயர் மற்றும் வொயாஜெர் செய்மதிகளாலும் கலிலீயோ ஆர்பிட்டர் எனும் விண்கலத்தாலும் விரிவாக ஆராயப்பட்ட கிரகமாகும். மேலும் 2007 பெப்ரவரியில் வியாழனின் சுற்றுப்பாதை வழியாக புளூட்டோ கிரகத்தை ஆராயச் சென்ற நியூ ஹாரிஸன் எனும் விண்கலத்தால் சமீபத்தில் வியாழன் படம் பிடிக்கப்பட்டது. இவ்விண்கலம் வியாழனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி தனது வேகத்தை அதிகரித்துக் கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வியாழனின் துணைக் கோளான இயுரோப்பா பனிக்கட்டி மூலக்கூறுகளாலான சமுத்திரத்தை உடையது எனும் காரணத்தால் அது வானியலாளர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனி வியாழன் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் –
1.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் – 9 மணி 55 நிமிடம் 30 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் – 11.8618 ஆண்டுகள்
3.தனது அச்சில் சாய்வு – 1.305 பாகை
4.சுற்றுப் பாதையில் சராசரி வேகம் – 13.07 Km/s
5.சராசரி ஆரை – 69 911 +or- 6 km
6.மேற்பரப்பளவு – 6.1419 * (10 இன் வலு 10) km2 – 121.9 மடங்கு பூமியின்
7.கனவளவு – 1.4313 * (10 இன் வலு 15) Km3 – 1321.3 மடங்கு பூமியின்
8.நிறை – 1.8986 * (10 இன் வலு 27) Kg – 317.8 மடங்கு பூமியின்
9.சராசரி அடர்த்தி – 1.326 g/cm3
10.மையத்திலிருந்து ஈர்ப்பு – 24.79 m/s2 or 2.528 g
11.தப்பு வேகம் – 59.5 Km/s
12.மேற்பரப்பு வெப்பம் – குறை – 0.1 K, நடு – 0.165 K, மிகை – 0.112 K
13.மேற்பரப்பு அமுக்கம் – 20 – 200 kPa
வளி மண்டலத்தில் வாயுக்களின் வீதம் –
1.ஐதரசன் – 89.8%
2.ஹீலியம் – 10.2%
3.மெதேன் – 0.3%
4.அமோனியா – 0.026%
5.நீர் – 0.0004%
வியாழனின் துணைக் கிரகமான யுரோப்பாவில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அங்கு 10 Km அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 Km ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி அறியத் தந்தார்.
மேலும் 1994ம் ஆண்டு வெயில் காலத்தில் வானில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வாகப் பதியப் பட்டது என்னவென்றால் சூமேக்கர் லெவி 9 எனும் மிகப் பெரிய வால்வெள்ளி வியாழனுக்கு அண்மையில் வந்து அதன் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பல துண்டுகளாகச் சிதறி அதனுடன் மோதியது. இத்துண்டுகள் விஞ்ஞானிகளால் முத்துக்களின் சிதறல் எனும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டன. இம் மோதுகையினால் வியாழனில் மிகச் சிறிய நடுக்கங்கள் ஏற்பட்டதை வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். மேலும் இம்மோதுகை காரணமாக ஏற்பட்ட கரும் பொட்டுக்கள் வியாழனில் பல மாதங்களுக்குத் தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை வியாழன் குறித்த சுருக்கமான விபரங்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பத்திலேயே அடர்த்தி மிகக் குறைந்த கிரகமாகவும் இரண்டாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்கும் சனிக் கிரகத்தைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.