Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » சூரிய குடும்பம் – 5

சூரிய குடும்பம் – 5

இதுவரை சூரிய குடும்பத்தில் சூரியன்,பூமியின் துணைக்கோள் சந்திரன் மற்றும் தரை மேற்பரப்பை உடைய கிரகங்களான பூமி, புதன் ஆகிய அங்கத்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய தொடரில் வானில் சந்திரனுக்கு அடுத்து பிரகாசமாக அதிகாலை மற்றும் அந்தி மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஒரு நட்சத்திரம் போல் தென்படும் வீனஸ் எனப்படும் வெள்ளியைப் பற்றி பார்ப்போம். பொதுப்படையாக வீனஸ் என்பது ரோமானியார்களின் அன்பு,காதல் மற்றும் அழகுக்கான பெண் தெய்வத்தின் பெயராகும்.

– ஹபிள் தொலைக் காட்டியால் படம் பிடிக்கப் பட்டுள்ள வெள்ளியின் ஒரு பகுதி

வெள்ளிக் கிரகத்தின் இன்னொரு பெயரான சுக்கிரன் என்பது இந்து சமயத்தில் நவக்கிரகங்களில் அதிர்ஷ்டத்துக்கு அதிபதியாகவும் அசுர குருவாகவும் விளங்கும் கோள் அல்லது தேவராகும். இன்னொரு விதத்தில் வெள்ளியில் காணப்படும் வரண்ட பள்ளத்தாக்குகளாலும் பல உயிருள்ள எரிமலைகளாலும் அது நரகம் அல்லது அசுரர்களின் நிலம் என ஒரு சாராரால் அழைக்கப்படுகின்றது.

வெள்ளி பருமனிலும் இன்னும் சில அம்சங்களிலும் பூமிக்கு சராசரியாக சமனாக இருப்பதால் பூமியின் தங்கைக் கிரகம் என அழைக்கப்படுகின்றது. சூரியனிலிருந்து புதனுக்கு அடுத்து 2வது இடத்தில் இது அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தின் பெரும்பாலான கிரகங்களைப் போலன்றி வெள்ளி வலமிருந்து இடமாகவே எதிர்ப்பக்கமாக தனது அச்சில் சுழலுகின்றது. வெள்ளிக் கிரகமே தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வந்து செல்லும் கிரகமாகும். இது சூரியனிடமிருந்து சராசரியாக 108 200 000 Km தூரத்தில் சுற்றி வருகிறது.

வெள்ளி தனது அச்சில் மிக மெதுவாக சுற்றி வரும் கிரகமாகும். இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 224.7 புவி நாட்களையும் தனது அச்சில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வர 243 நாட்களையும் எடுக்கிறது. வெள்ளியின் எடை பூமியின் எடையின் 4/5 பங்காகும். அதன் ஈர்ப்பு விசை புவியை விட சிறிது குறைவு. பூமியில் 100 பவுண்ட் எடையுடைய ஒரு பொருள் வெள்ளியில் 91 பவுண்டுகளாகும். மேலும் வெள்ளியின் அடர்த்தியும் புவியை விட சிறிதே குறைவாகும். வெள்ளியின் வளி மண்டலத்தின் தன்மை காரணமாக அது சூரிய குடும்பத்தில் வேறு எந்த கிரகத்தையும் விட மிக அதிக வெப்பமுள்ள கிரகமாக விளங்குகின்றது. வெள்ளியின் மேற்பரப்பு வளி மண்டல அடுக்கின் வெப்ப நிலை 55 F(13 C) ஆகவும் தரை மேற்பரப்பின் வெப்பநிலை 870 F(465 C) ஆகவும் காணப்படுகின்றது. இக்கிரகத்தின் அதீத வெப்பநிலை காரணமாக இக்கிரகத்தின் உள்ளே தண்ணீர் காணப்படின் அது முழுதும் ஆவியாகி விடும் சூழ்நிலையே நிலவுகின்றது. இதன் காரணமாக பூமியில் காணப்படும் உயிரினங்கள் இங்கே வாழ முடியாது. எனினும் வேறு ஏதும் உயிர்கள் இங்கு காணப்படுகிறதா என விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை. இனி வெள்ளி பற்றிய சுருக்கமான இயல்புகளைப் பார்ப்போம்.

1.சூரியனிலிருந்து சராசரித் தூரம் – 0.72333199 AU
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் – 224.701 நாட்கள்
3.தன்னைத் தானே தனதச்சில் ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் – 243.0187 நாட்கள்
4.பூமி சார்பாக சுற்றுக் காலம் – 583.92 நாட்கள்
5.சராசரி சுற்று வேகம் – 35.0214 Km/s
6.துணைக் கோள் – இல்லை
7.மையத்தினூடாக விட்டம் – 12103.6 Km
8.மேற்பரப்பளவு – (4.60 * 10 இன் வலு 8) Km2
9.திணிவு – (4.869 * 10 இன் வலு 24) Kg
10.சராசரி அடர்த்தி – 5.24 g/cm3
11.மேற்பரப்பு ஈர்ப்பு விசை – 8.87 m/s2
12அச்சின் சாய்வு – 2.64 பாகை
13.தப்பு வேகம் – 10.36 Km/s
14.மேற்பரப்பு வெப்ப நிலை – தாழ்வு 228K இடை 737 K உயர் 773 K
15.வளியமுக்கம் – 9321.9 Kpa

வெள்ளியின் வளி மண்டலத்தில் உள்ள வாயுக்களின் வீதங்கள் –

1.கார்பனீரொட்சைட்டு – 96%
2.நைட்ரஜன் – 3%
3.சல்பர் ஒக்ஸைட் – 0.015%
4.நீராவி – 0.002%
5.ஹீலியம் – 0.0012%
6.நியோன் – 0.0007%

வெள்ளிக் கிரகத்தின் வயது புவியின் வயதுக்கு அண்ணளவிற் சமனாகும். இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்திலேயே சூரியனிடமிருந்து தோன்றின என்றும் ஒரு சிலரால் கருதப்படுகின்றது. வெள்ளியின் வளி மண்டலத்தைப் பார்த்தால் மிக அதிகளவாக காபனீரொட்சைட்டு (96%) காணப்படுகின்றது. இதனால் சூரிய குடும்பத்திலேயே மிகப் பாரமான வளி மண்டலத்தையுடைய கிரகமாக வெள்ளி விளங்குகின்றது. பூமியைப் போலவே வெள்ளியிலும் பச்சை வீட்டு விளைவு எனும் தாக்கம் நிகழ்கின்றது. ஆனால் இத்தாக்கம் தாவரங்களில் அல்லாது வளி மண்டலத்தில் நிகழ்கிறது. அதாவது காபனீரொட்சைட்டும், சல்பூரிக் அசிட்டும் இணைந்து சூரிய ஒளியை சிறைப் பிடிப்பதுடன் அதை வெளியேறாமலும் செய்து விடுகின்றன. இதனாலேயே வெள்ளியின் சுற்றாடல் மிக வெப்பமாகக் காணப்படுகின்றது.

மேலும் வெள்ளியின் வளியமுக்கமும் பூமியை விட 90 மடங்கு அதிகம் (9321 Kpa) என்பதுடன் வெள்ளியின் பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கிலிருந்து மேற்காக 362 Km/h வேகத்தில் தொடர்ச்சியாகக் காற்று வீசி வருகின்றது.

வெள்ளியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியைப் போலவே வெள்ளியிலும் மலைகள்,மைதானங்கள்,பள்ளத்தாக்குகள், மற்றும் சமவெளிகள் என்பன காணப்படுகின்றன. தரை மேற்பரப்பில் 65% வீதம் சம்வெளிகளாகும். 35% வீதம் மலைகள் காணப்படுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான எரிமலைகளும் வரண்ட நிலங்களும் காணப்படுகின்றன. வெள்ளியின் மிக உயர்ந்த மலை மாக்ஸ்வெல் இமய மலையை விடப் பெரிது என்பதுடன் இதன் உயரம் 11.3 Km ஆகும். வெள்ளியில் சந்திரன் மற்றும் செவ்வாயை விடக் குறைவாகவே குழிகள் காணப்படுகின்றன. மேலும் இதன் தரை மேற் பரப்பின் வயது
1 பில்லியன் வருடங்களை விடக் குறைவாகும். பூமியில் காணப்படாத அரிதான மூலகங்கள் சில வெள்ளியின் உட்பகுதியிலிருந்து எரிமலைச் செயற்பாட்டின் மூலம் அதன் தரை மேற்பரப்புக்குத் தள்ளப் பட்டு வருகின்றமை அவதானிக்கப் பட்டுள்ளது.

வானியல் விஞ்ஞானிகள் ரேடியோ வானியல்,செய்மதிகள், மற்றும் ரேடார் ஆகிய தொழிநுட்பங்களைப் பிரயோகித்து கடந்த 50 வருடங்களாக வெள்ளியின் தரையியல்பை ஆராய்ந்து வருகின்றனர். வெள்ளிக் கிரகமே விண்கலம் ஒன்றின் மூலம் முதன் முறையாக ஆராயப்பட்ட கிரகமாகும். நாசாவின் ஆளில்லா விண்கலமான ‘மரீனர் 2’ 12 மாதங்களாகக் கிட்டத்தட்ட 34 760 Km தூரம் பயணித்து வெள்ளியை அண்மித்து அதன் மேற்பரப்பு வெப்ப நிலை குறித்து ஆராய்ந்தது. அதன் பின் 1966ம் ஆண்டு இரு ரஷ்ஷிய ஆளில்லா விண்கலங்கள் வெனேரா 2 மற்றும் வெனேரா 3 என்பன வெள்ளியை அண்மித்து அது குறித்து ஆராய்ந்தன. இதையடுத்து மேலும் சில விண்கலங்கள் உதாரணமாக நாசாவின் மரீனர் 10 மற்றும் ரஷ்யாவின் வெனேரா 7,9,10 என்பன வெள்ளிக்கு அனுப்பப் பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top