சமீபத்தில் சர்வதேச சமுத்திர ஆய்வு திட்ட ஆய்வாளர்கள் ஜப்பான் கடற்கரை ஓரமாக கடற்படுக்கைக்குக் கீழே சராசரியாக 2 1/2 Km (2440 மீட்டர்) ஆழத்தில் நிலக்கரி படுக்கைக்களுக்கு (coal beds) இடையில் ஒரு கலமுடைய உயிரியின் ஆர்கனிசம்களைக் (microbes) கண்டு பிடித்துள்ளனர்.
இதுவே பூமியில் சமுத்திரங்களுக்குக் கீழே மிக ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட உயிர் வாழ்க்கையாகும்.
மேலும் இந்தக் கண்டுபிடிப்பானது நமது பிரபஞ்சம் அல்லது சூரிய குடும்பத்திலுள்ள ஏனைய கிரகங்களின் தரைக்குக் கீழே பக்டீரியாக்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கலாம் என்ற நம்பிக்கையையும் அதிகப் படுத்தியுள்ளது. இந்தக் கோள நுண்ணுயிர்கள் கண்டு பிடிக்கப் பட்ட 8000 அடி ஆழமானது உயிர் வாழ்க்கைக்கு மிக அவசியமான சூரிய ஒளியோ அல்லது ஆக்ஸிஜனோ கிடைக்காத மேலும் மிகுந்த அழுத்தம் (pressure) நிலவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டச் சத்துக் குறைவான இப் பிரதேசங்களில் பக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் மிக மந்தமான வளர் சிதையுடனேயே உயிர் வாழ்ந்து வருவதுடன் இவை உயிர் வாழ தம்மைச் சுற்றியுள்ள நிலக்கரியில் (coal) உள்ள ஹைட்ரோ கார்பன் கட்டமைப்பை உடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும். இந்நிலையில் ஜப்பான் கடலின் ஆழத்தில் நிலக்கரிப் படுக்கைகளில் கண்டு பிடிக்கப் பட்ட நுண்ணுயிர்களுக்கு சாதகமான ஏதோ ஓர் சுற்றுச் சூழல் பொறிமுறை (ecosystems) அங்கு நிலவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும் இதே போன்ற பொறிமுறை ஏனைய கிரகங்களிலும் இருக்கும் பட்சத்தில் அவற்றிலும் நுண்ணுயிர் வாழ்க்கை நிச்சயம் இருக்கும் எனக் கருதுகின்றனர்.
இதேவேளை தற்போது செவ்வாய்க் கிரகத்தில் கியூரியோசிட்டி விண்கலத்தால் கண்டு பிடிக்கப் பட்டுள்ள விளக்கப் படுத்தப் படாத மெதேன் ஸ்பைக்குக்கள் (methane spikes) அங்கு பக்டீரியாக்கள் இருப்பதற்கான சான்றாகும் என கலிபோர்னியாவில் உள்ள நாசா விஞ்ஞானிகள் என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.