இத்தொடரில் நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி (Milky way)அண்டத்தின் உள்ளே உள்ள சூரிய குடும்பம் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வோம்.
வட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப் பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.
மேலும் நமது பால்வெளி அண்டத்தின் மத்தியில் விசேச நிறையுடைய மிகப் பெரிய கருந்துளை ஒன்று காணப்படுவதாகவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரபஞ்சத்தின் தூசு எனப்படும் அடர்ந்த வாயுப் படலத்தில் இருந்து 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் நமது சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என கருதப்பட்ட போதும் ஹபிள் போன்ற நவீன தொலைகாட்டிகளின் புகைப் படங்கள் மூலம் தெளிவாக்கப் படுவது என்னவென்றால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து அண்ணளவாக 27 200 ஒளிவருடங்கள் தூரத்தில் அதன் கரையிலேயே அமைந்திருக்கிறது என்பதாகும்.
சூரிய குடும்பத்தில் சூரியனுடன் ஒன்பது கிரகங்கல் காணப்பட்டாலும் அவற்றில் மிகப் பெரியதும் நடுநாயகமானதும் சூரியனே ஆகும். பால்வெளி அண்டத்தைப் போலவே சூரியனும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண நட்சத்திரமே ஆகும். சூரியனைப் பற்றிய முக்கியமான அறிவியல் தகவல்கள் பினவருமாறு:
1.பூமியில் இருந்தான தூரம் – 1.00 AU(Astronomical unit) or (1.495979 * 10 இன் வலு 8) Km
2.பூமியில் இருந்து நோக்கும் போது தெரியும் சராசரி கோண விட்டம் – 0.53 பாகை
3.தன்னைத் தானே சுற்ற எடுக்கும் நேரம் – 25.38 நாட்கள்
4.விட்டம் – (6.9599 * 10 இன் வலு 5) Km
5.நிறை – (1.989 * 10 இன் வலு 30) Kg
6.சராசரி அடர்த்தி – 1.409 g/cm3
7.மேற் பரப்பில் தப்பு வேகம் – 617.7 km/S
8.ஓளிச்சக்தி – (3.826 * 10 இன் வலு 26) j/S
9.மேற்பரப்பு வெப்பம் – 5800 K(கெல்வின்)
10.மைய வெப்பம் – (15 * 10 இன் வலு 6) K
11.நட்சத்திர வகை – G2V
12.பார்வைத் திறன் – 4.83
சூரியனில் அடங்கியுள்ள வாயுக்களின் வீதம் வருமாறு :
Hydrogen – 73.46%
Helium – 24.85%
Oxygen – 0.77%
Carbon – 0.29%
Iron – 0.16%
Neon – 0.12%
Nitrogen – 0.09%
Silicon – 0.07%
Magnesium- 0.05%
Sulfur – 0.04%
சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை வருமாறு:
1.போட்டோ ஸ்பியர் (photosphere)
2.குரோமோ ஸ்பியர் (chromosphere)
3..கொரோனா(corona)
சூரியனின் கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்பு photosphere எனப்படுகின்றது. சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படை என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பம் 500 Km இலும் குறைந்தது ஆகும். மேலும் இதன் வெப்பநிலை 5800 K(கெல்வின்) ஆகும். போட்டோ ஸ்பியருக்கு கீழே காணப்படும் பகுதியில் இருந்து அதிகளவு போட்டோன்கள் (ஒளிக்கதிர்கள்) வெளியான போதும் இதன் வாயுப்படை அதில் பெரும்பகுதியை தடுத்து விடுகின்றது. மேலும் பூமியின் வளி மண்டலத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் போட்டோ ஸ்பியரின் அடர்த்தி 3400 மடங்கு குறைந்தது எனவும் கூறப்படுகின்றது. வருங்காலத்தில் மிக உறுதியான உலோகத்தினால் ஆக்கப்படும் விண்கலமொன்று சூரியனின் இப்படையில் (7 * 10 இன் 4 0ஆம் வலு) Km வரை அதாவது மையத்தை நோக்கி 10 வீதம் வரை உள்ளே செல்ல முடியும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றது.
அடுத்த படலம் இதற்கு மேலே அமைந்துள்ள குரோமோ ஸ்பியர் ஆகும். இது போட்டோ ஸ்பியரை விட அடர்த்தி குறைந்தது. வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒளிப் படலமான இது சூரிய கிரகணத்தின் போது மறைக்கப்பட்ட சூரியனின் எல்லை வட்டத்தில் மிகுந்த பிரகாசமாக நாவல் நிற கோட்டை அடுத்து தென்படும். நாவல் என்பது சூரிய ஒளியிலுள்ள சிவப்பு,நீலம்,வயலெட் ஆகியவற்றின் கலவை ஆகும். குரோமோ ஸ்பியர் ஆனது அதன் நிற மாலை காரணமாக வானியலாளர்களால் விரும்பி ஆராயப் படுகின்றமை குறிப்பிடத் தக்கது. நாம் சுவாசிக்கும் வாயுவை விட குரோமோ ஸ்பியர் (10 இன் வலு 8) மடங்கு அடர்த்தி குறைவானது.
இறுதியாக கொரோனா(corona) பற்றி நோக்குவோம். சூரியனின் மையத்தில் இருந்து மிகப்பெரிய பரப்பளவுடைய குரோமோ ஸ்பியருக்கு மேலாகவும் உள்ளேயிருந்து படர்ந்துள்ள பகுதி கொரோனா படலம் எனப்படுகின்றது.கிரேக்க நாகரிக மக்களால் கிரவுன் என அழைக்கப்பட்ட ஓளி அலைகளை உள்ளடக்கியுள்ள இப்பகுதி சூரியனில் இருந்து பூமிக்கான தூரத்தின் 10 வீதத்தை உடையது என்பதுடன் 20 சூரிய விட்ட ஆரையைக் கொண்டது. மையத்தில் இருந்து புறப்படும் கொரோனோ இன் ஒளிக்கதிர்களின் சராசரி வெப்ப நிலை 1 மில்லியன் கெல்வின் அதாவது போட்டோ ஸ்பியரை விட பல நூறு மடங்கு அதிகமானது. அதிகளவான இந்த வித்தியாசம் பல விஞ்ஞானிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது பற்றி மேலும் ஆராய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு மையம் SOHO எனப்படும் செய்மதியை ஏவியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் இச்செய்மதி சூரியனின் வெளிப்படலமான போட்டோ ஸ்பியர் பற்றி தீவிரமாக ஆராய்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றது.
சூரியனில் எவ்வகையான செயற்பாடு நிகழ்கின்றது என்பது குறித்து இப்போது நோக்குவோம். சூரியனில் நிகழும் முக்கிய கருத்தாக்கமானது ஐதரசனின் உட்கரு பிளவுற்று ஹீலியம் அணுக்களாக மாறுவதே ஆகும். எனினும் மேலும் சில தாக்கங்களும் நிகழ்கின்றன என விஞ்ஞானிகள் கருதக் காரணம் சூரியனின் மையப் பகுதியிலிருந்து வெளியாகும் சிறியளவான நியூட்ரினோக்களே ஆகும். சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் மேற் கொள்ளப்பட்ட கடவுள் துணிக்கை குறித்த ஆராய்ச்சியின் போது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கண்டு பிடிப்பாக ஓளியை விட நியூட்ரினோக்கள் வேகம் கூடியவை என அறிவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
சூரியனைப் போலவே ஏனைய நட்சத்திரங்களிலும் மேலே அவதானித்த மூன்று படைகளும் காணப்படும் என்ற போதும் கருத்தாக்கங்கள் வித்தியாசப் படலாம் என்பது வானியலாளர்களின் கருத்து. இதுவரை சூரியனைப் பற்றிய மேலோட்டமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். எதிர்வரும் தொடரில் கிரகங்களைப் பற்றிப் பார்ப்போம்.
தொடரும்