Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இன்கா தங்கப்புதையல்!!

இன்கா தங்கப்புதையல்!!

இன்கா தங்கப்புதையல்

லத்தின் அமெரிக்காவில் மத்திய ஈகுவடாரில் அமைந்திருக்கும் அடர்ந்த மலைப்பிரதேசத்தின் குகைகளில் டன் கணக்கில் தங்கப்புதையல் இருப்பதான கதைகளின் பின்னனி சுவாரசியமான வரலாறு.

1532ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்பவரின் தலைமையில் ஸ்பானீஷ் படையொன்று இன்கா பேரரசரை சிறைபிடிக்கும் முயற்சியில் முன்னேறியது. ஏற்கனவே இன்கா பேரரசில் அப்போதுதான் சகோதர யுத்தம் நடந்து தனது சகோதரர் குயாஸ்கரை வீழ்த்தி அரியணையில் அமர்ந்திருக்கிறார் அதூல்பா.

ஏற்கனவே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் களைப்படைந்து போயிருந்த இன்கா படைகள் ஸ்பானீஷ் படைகளிடம் எளிதாய் வீழ்ந்திருக்கிறது. அதூல்பா இன்கா தலைநகரான கஜமார்காவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்.

தன்னை விடுவித்தால் அதற்கு ஈடாக மலை மலையாக தங்கம் தருவதாக பிஸ்ஸாரோவிடம் பேரம் முடித்திருக்கிறார் அதூல்பா. அதன்படி தங்கள் அரசரை விடுவிப்பதற்காக இன்கா பேரரசு முழுவதுதிலுமுள்ள மக்களிடமிருந்து தங்கமும் வெள்ளியுமாய் பெறப்பட்டு அவை இரண்டு தவணையாக பிஸ்ஸாரோவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

விதவிதமான தங்க கைவினைப்பொருட்கள் முதல் தவணையில் ஒப்படைக்கப்பட்டவுடன் பிஸ்ஸாரோ அந்த அழகிய தங்க வைவினைப்பொருட்கள் அனைத்தையும் உருக்கி தங்கக்கட்டிகளாய் ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டு இரண்டாவது தவணையைப் பற்றி அறியாமல் தனது வாக்குறுதியைக் மீறி இன்கா பேரரசர் அதூல்பாவை ஆகஸ்ட்-29, 1533 அன்று இன்கா தலைநகரான கஜமார்காவிலேயே கொன்று தீயிலிட்டு கொளுத்தியிருக்கிறான்.

கிட்டத்தட்ட 60,000 பணியாட்கள் மூலம் 750 டன் தங்க கைவினைப்பொருட்களை இன்கா தலைநகரை நோக்கி சுமந்து வந்து கொண்டிருந்த இன்கா ஜெனரல் ருமினாஹீய், இன்கா பேரரசர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் தங்கம் மொத்தத்தையும் ல்லங்கானேட்ஸ் என்ற ஈகுவடாரின் மலைப்பிரதேசத்துக்கு எடுத்துச்சென்று மறைத்துவிட்டார்.

அதற்குப் பின்னர் இன்கா ஜெனரல், ஸ்பானீஷ் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு, சிறைபிடிக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இன்கா தங்கத்தை வைத்த இடம் பற்றி எவ்விதத் தகவலையும் கூறாமல் அந்த மர்மப்புதையலை தனது மரணத்தோடு சேர்த்தே மறைத்து கொண்டார்.

தொடர்ந்து வந்த காலங்களில் இன்று வரையிலும் தங்க வேட்டைக்காக பலவிதமான தேடல்கள் நடந்து கொண்டேயிருந்தாலும் எல்லாமே வெறுங்கையாகவே முடிந்த கதைகள் இன்கா தங்கப்புதையலை இன்னமும் தீரா மர்மமாகவே நீட்டித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top