இந்திய இணைய இணைப்பு வேகம்
இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். ரிலையன்ஸ் 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 112 மெகா பிட்ஸ் வேகம் தரும்.
இந்தியாவில், 49Mbps வேகத்தில் டவுண்லோட் செய்திட முடியும் என்பதே ஆச்சரியமான ஒரு தகவலாகும். இருந்தாலும், உலக அளவில், அதன் சராசரியான வேகத்துடன் ஒப்பிடுகையில், இது மிக மிகக் குறைவான ஒன்றாகும்.
ரிலையன்ஸ் 4ஜி அதன் உறுதிமொழிக்கேற்ப வேகமான இணைய இணைப்பினைத் தந்தாலும், அது பிரிட்டனில் கிடைக்கும் இணைய இணைப்பினைக்
காட்டிலும் 30% குறைவாகவே இருக்கும். பிரிட்டனில் சில இடங்களில் 60Mbps வேக இணைப்பு கிடைக்கிறது.
இணைய இணைப்பு வேகத்தினைக் கண்காணிக்கும் Speedtest.net என்ற இணைய தளம் இன்னும் பல ஆர்வமூட்டும் தகவல்களைத் தந்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 85.54Mbps வேகம் கிடைக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சராசரி இணைய வேகம் 18.5Mbps மட்டுமே. மொபைல் நெட்வொர்க் இணைப்பில், அமெரிக்க சராசரி வேகம் 58.25Mbps ஆக உள்ளது.
கூகுள் நிறுவனம், Google Fiber என்ற திட்டத்தின் கீழ் நொடிக்கு 1Gbps (gigabits per second; 1gigabit = 1024megabits) வேக இணைப்பு தருவதாக அறிவித்து வழங்கி வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் கான்சஸ் நகரத்தில் அதிக பட்ச வேகம் 49.86Mbps ஆக உள்ளது. இது, அமெரிக்காவில் இரண்டாவது அதிக வேகமாகும்.
உலகிலேயே மிக அதிகமாக இணையத்துடன் இணைப்பில் இருக்கும் நாடாக தென் கொரியா பெயர் பெற்றுள்ளது. இதன் அதிக பட்ச பிராண்ட்பேட் வேகம் 53.3Mbps. சராசரி வேகம் 13.3Mbps. மொபைல் நெட்வொர்க்கில், இந்நாட்டில் இயங்கும் SK Telecom நிறுவனம், தான் அதிக பட்ச வேகமாக 225Mbps அளவினை எட்டியதாக அறிவித்துள்ளது. இதன் LTEA தொழில் நுட்பம், மொபைல் நெட்வொர்க்கில் 50% கூடுதலான வேகத்தில் டேட்டா டவுண்லோடினை அனுமதித்ததாக அறிவித்துள்ளது. ஹாங்காங் நாட்டில், உலகிலேயே அதிக வேகமான இணைய இணைப்பு (65.1Mbps) வேகம் உள்ளது. இங்கு இணைய இணைப்புகளின் சராசரி வேகம் 10.8Mbps. இங்கு கிடைக்கும் 4ஜி மொபைல் ஸ்பீட் 20Mbps ஆக உள்ளது. இந்தியாவில் 4ஜி இணைப்பினை, பார்தி ஏர்டெல் நிறுவனமும் வழங்க இருக்கிறது. தற்போது புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் இதன் நெட்வொர்க்குகள் இயங்குகின்றன. இங்கும் மொபைல் போன்களில் இது கிடைக்கவில்லை. இந்நிறுவனத்தின் யு.எஸ்.பி. டேட்டா கார்ட் மூலம் சராசரி டேட்டா டவுண்லோட் 40Mbps கிடைக்கிறது. ஆனால், இது 100Mbps வேகம் அடைய முயற்சிக்கிறது.
மேற்கண்ட தகவல்களிலிருந்து, இந்தியாவின் இணைய இணைப்பு வேகம், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவாகவே உள்ளது என்பதனை அறியலாம்.
3ஜி இணைய இணைப்பிற்கான கட்டணம் இந்தியாவில் இதன் பரவலுக்கு ஒரு தடையாகவே உள்ளது. நிறுவனங்கள் இதனால், வலுவான கட்டமைப்பினை அமைக்கத் தயங்குகின்றனர். அதிகமான எண்ணிக்கையில் மக்களை 3ஜி அல்லது 4ஜிக்குக் கொண்டுவர, கட்டமைப்பிற்கான செலவு அதிகமாகும். அதற்கேற்ற வகையில், இணைய இணைப்பிற்கான கட்டணத்தை விதிக்க முடியவில்லை. இதனால், இருபக்க இழுபறியாக இணைய வேகம் உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாகப் பரவிவருவதால், இதன் பயனர்கள், அதிவேக மொபைல் இன்டர்நெட்டினை எதிர்பார்க்கலாம். பெரும் அளவில் மக்கள் மொபைல் இன்டர்நெட் மூலம் வீடியோ காண முயற்சிப் பார்கள் என்பதனால், இந்த வகையில் மொபைல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும். அதனால், குறைந்த கட்டணத்தில் இணைப்பு வழங்கி, இணைய நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப கட்டமைப்பினை வலுப்படுத்த முடியும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.