Home » பொது » இந்தியாவின் தீர்க்கப்படாத மர்மங்கள்…!
இந்தியாவின் தீர்க்கப்படாத மர்மங்கள்…!

இந்தியாவின் தீர்க்கப்படாத மர்மங்கள்…!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

எப்போதுமே மிதவாதத்துக்கும் தீவிரவாதத்துக்குமான ஆதரவில் இளைய சமுதாயம் இரண்டாவதில்தான் அதீத ஆர்வமும் ஆதரவும் கொண்டிருக்கும். நேதாஜி என்ற பேரைக்கேட்டாலே இன்றளவும் இளைஞர் கூட்டம் எழுச்சியடைவதற்கான வரலாறு மிகப்பெரியது. பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தபோது காந்தி ஒரு பக்கம் அஹிம்சைப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதேப்போல நாடு முழுவதும் பலவிதமான குழுக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதப்போராட்டத்தை இராணுவப்போராட்டமாக மாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான். இன்றைய இந்திய இராணுவத்திற்கு அடித்தளமிட்டவரும் இவர்தான். (அவருடைய வரலாற்றைப்பற்றி எழுதுவதனால் அதற்கு தனியே ஒரு பதிவு தேவைப்படும் என்பதால் இந்தப்பதிவின் தலைப்பிற்கான சமாச்சாரத்தை பற்றி மட்டும் இதில் பார்க்கலாம்.

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டிய நேதாஜி… உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டதுதான் இன்று வரையிலும் சுதந்திர இந்தியாவின் தீராத மர்மங்களில் நேதாஜிக்கு முதலிடம் வழங்கியிருக்கிறது.

1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன. 1945ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் ஜப்பான் சரணடையும் முடிவை எடுத்த மூன்றாவது நாளில் நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாக வெளியிடப்பட்ட செய்தியே, ஆங்கிலோ-அமெரிக்க படைகளிடம் போர்க்கைதியாக சிக்காமலிருக்க நேதாஜியால் நடத்தப்பட்ட நாடகம்தான் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. நேதாஜி இறந்ததாக தகவல் வெளியான சமயத்தில் உண்மையில் அவர் ஜப்பானின் டோக்யோ நகரத்தின் வழியாக சோவியத் யூனியனுக்கு சென்று விட்டதாக தகவல் உண்டு.

இன்று வரையிலும் நேதாஜி விஷயத்தில் இந்திய மக்களுக்கு தெரியாமல் போன மர்மமாய் நீடிப்பதில் கீழ்க்காணும் விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை…

1) தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து நடந்ததாக எந்தவித ரெக்கார்டுகளும் இல்லை என்று மறுத்திருப்பது இந்திய அரசாங்கத்தால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2) பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று முடிவெடுத்ததாக பதியப்பட்டிருக்கிறது. இது நடந்தது அக்டோபர் 1945ல். அப்படியென்றால் ஆகஸ்ட் 1945ல் போஸ் இறந்ததாகக் கூறப்பட்டது பொய்தானா?…

3) CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950 வரையிலும் நேதாஜிக்கான தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. உண்மையிலேயே 1945லேயே நேதாஜி இறந்திருந்தால் 1950 வரையிலும் அவரைத்தேடியிருக்க வேண்டிய அவசியமென்ன?…

4) 1946ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய இரீஷ் பிரசிடெண்ட் டி’வலேராவை டப்ளின் நகரில் நேதாஜியை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டி’வலேராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். அத்தோடு மட்டுமில்லாமல் 1946க்கு பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த டி’வலேரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்!

5) பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் நேதாஜி எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப்பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.

6) ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர்.சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் நேதாஜியும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாக பக்கத்து பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே நேதாஜிக்கு சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைவிட அதிர்ச்சிகரத்தகவல் என்னவென்றால் சிறையிலிருந்து நேதாஜி பலமுறை நேருவுக்கு தான் இந்தியாவுக்கு திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதுதான்!!!

7) 1946ல்தான், அதாவது நேதாஜி இறந்ததாகக் கூறப்பட்ட ஒரு வருடம் கழித்துதான் இந்திய அரசாங்கம் நேதாஜி இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்திருக்கிறது.

8) நேதாஜியின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும் மட்டுமே அதில் பயணித்ததாகவும், நேதாஜி அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

9) விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட தேதியிலும், அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இருக்கும் பத்து நாட்களிலும் தாய்பேயில் அப்படி எந்தவொரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்த நீதிபதி முகர்ஜி கமிஷனின் அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் நிராகரித்தது?…

10) நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இதுவரையிலும் அந்த விமான விபத்து பற்றிய புகைப்படங்களோ… இல்லை… அந்த விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களைப்பற்றிய தகவல்களோ ஏனில்லை?…

இதைப்போன்ற விடையில்லா கேள்விகள் போலவே நேதாஜியின் விஷயத்தில் நீடித்திருக்கும் மர்மத்திற்கு காரணம் நேருவே என்றும் ஒரு தகவல் உண்டு. சுதந்திரத்திற்கு பிறகான ஆட்சிக்கு குறிவைத்த நேருவுக்கு அக்காலத்தில் மிகப்பெரிய தலைவலியாய் தெரிந்தவர் அமோக மக்கள் ஆதரவு கொண்ட நேதாஜி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜியை நேருவே கடைசிவரை ரஷ்யாவிலேயே வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் சில தகவல்கள் உலவுகின்றன. நேதாஜி இந்தியாவுக்குள் 1985 வரையிலும் ‘’பகவான்ஜி’’ என்ற பெயரில் உத்திரப்பிரதேசத்தில் ஒரு ஆன்மீகவாதியாய் வாழ்ந்ததாகவும் தகவலுண்டு.

எது எப்படியோ?… நேதாஜியின் இறப்பு இன்று வரையிலும் சர்ச்சைகள் விலகாத இந்தியாவின் டாப் மர்மமாகவே நீடித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top