இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும். முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். “பவான் ஜேர்னல்” என்ற சஞ்சிகையில் (13-7-69) அவர் எழுதிய கட்டுரையில், தான் 1903-ம் ஆண்டு இறந்த தனது தந்தையுடனும், 1821-ல் இறந்த நெப்போலியனுடனும், இன்னும் சேர் ஒலிவர் லொட்ஸ், மீராபாய், மோதிலால் நேரு ஆகியோருடனும் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார்.
1930-ம் ஆண்டு தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு முன்னர், திரு.முன்ஷி காஷ்மீருக்குத் தனது குடும்பத்தினருடன் போய் வரத் திட்டமிட்டார். அதற்காக ஒரு ஆவியை அழைத்து காஷ்மீருக்கு எப்போது போவது நல்லது என்று கேட்டார். ஆவி, “நீங்கள் அங்கு போக மாட்டடீர்கள், ஜெயிலுக்குப் போகப் போகிறீர்கள்” என்று கூறியதாம். ஆவி கூறியது போலவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் வேத வியாசரின் ஆவியை அழைத்தார் திரு.முன்ஷி. வேத வியாசர் என்று தன்னைக் கூறிக் கொண்டு வந்த ஆவி பிரம்ம சூத்திரத்தின் முதல் சுலோகத்தை தட்டுத்தடுமாறிக் கூறியதாம். அச்சுலோகத்தைச் சரியாகக் கூறும்படி வற்புறுத்திய பொழுது அவரைக் கேலி பண்ணியதாம்.
திரு.முன்ஷி டில்லியில் ஒரு வீடு வாங்கத் தீர்மானித்து, தனக்குப் பிரியமான ஆவியை அழைத்து ஆலோசனை கேட்டார். அந்த ஆவி ஒரு நபரின் முகவரியைக் கொடுத்து அவருடன் தொடர்புக் கொள்ளும்படி கூறியது. ஆவி கொடுத்த விபரப்படி ஒரு தெருவோ, வீடோ டில்லியில் இருக்கவில்லை.இதனால் ஆவி கூறுபவையெல்லாம் உண்மையென்று ஏற்கவும் முடியவில்லை. முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானவை என்று நிராகரிக்கவும் முடியவில்லை.
ஒரு குறிப்பிட்ட நபரின் ஆவி என்று கூறிக் கொண்டு “மீடியம்” மூலம் தன்னை வெளிப்படுத்தும் ஆவி உண்மையிலேயே அந்த நபரின் ஆவிதானா என்பதையும் ஆவிகள் கூறுவதெல்லாம் நம்பககரமானவை தானா என்பதையும் பின்னர் ஆராய்வோம்.
மூதாதையரை வணங்கும் வழக்கம் உலகின் நாகரீக இனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எகிப்தியர்கள் இறந்தவர்களின் சடலங்களைப் பத்திரப்படுத்தி வைத்து அவைகளின் மேல் “பிரமிடு” கட்டி வைத்தார்கள். பாபிலோனியர்கள், தங்கள் மூதாதையர்களின் சவக்குழிகளுக்கு மேல் கட்டிடங்களை அமைத்து, அவைகளை அலங்கரித்து, அவைகளுக்கு மரியாதை செலுத்தி வந்தார்கள். பார்சிக்காரர்கள், குறிப்பிட்ட சில தினங்களில் தங்கள் மூதாதையரின் ஆவிகளை வணங்கி, அவைகளின் ஆசிகளையும் வழி நடத்தலையும் வேண்டி நிற்பர். பண்டைக்கால எபிரேபிய மொழியில் ஈலோஹிம் என்பது இறந்து போனவர்களின் ஆவியையே குறித்தது. தற்காலத்தில் ஈலோஹிம் என்றால் கடவுள் என்று மொழி பெயர்க்கப்படுகிறது.
ஆப்ரஹாம், ஜேக்கப், மோசஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் காலத்திலிருந்து இயேசு பெருமானின் சிஷ்யர்களின் காலம் வரை எல்லா அருட்போதகர்களும் பிதாவின் ஆவி தம்மை வழிப்படுத்தியதாகவே நம்பினார்கள். இயேசு பெருமானும், நபிகள் நாயகமும் தேவதூதர்களின் அருள்மொழிகளைத் தாம் வெளிப்படுத்துவதாகக் கூறினார்கள். கிறிஸ்தவ சமயத்தில் புனிதர்களை வணங்கும் வழக்கம், மூதாதையரை வணங்கும் மரபுக்கு ஒப்பானதாகவுள்ளது. இவற்றைப் பார்க்குமிடத்து இறந்த பின் ஏதோ ஒருவகையான வாழ்வு தொடர்கிறது என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றிக் கூறலாம்.
ஆனால் இறந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், எப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.
அவர்கள் எங்கு தான் வாழ்கிறார்கள்?
அடுத்துப் பார்க்கலாம்.